பெங்களூர் அணியை வீழ்த்தியது பஞ்சாப் அணி்
by CricketArchive


Scorecard:Kings XI Punjab v Bangalore Royal Challengers
Player:SE Marsh
Event:Indian Premier League 2007/08

DateLine: 12th May 2008

போட்டி: 20 ஓவர்கள் போட்டி (இரவு ஆட்டம்), 34-வது தகுதிச்சுற்று ஆட்டம்
இடம் : பஞ்சாப் கிரிக்கெட் மைதானம், மொஹாலி.
தேதி : 12.05.2008. திங்கள் கிழமை.
மோதிய அணிகள்: பெங்களூர் அணி - பஞ்சாப் அணி
முடிவு: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி
ஆட்ட நாயகன்: ஷான் மார்ஷ்


வணக்கம்

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டியின் 34-வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று இரவு மொஹாலியிலுள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் பெங்களூர் அணியும் பஞ்சாப் அணியும் மோதின. இதில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

கடந்த போட்டியில் விளையாடிய பெங்களூர் அணி வீரரான சந்தர் பால் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மிஸ்பா உல் ஹக் சேர்க்கப்பட்டார்.

அதே போல பஞ்சாப் அணியிலும் கரண் கோயல், ராம் நரேஷ் சர்வான் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக லூக் பொமர்ஸ் பேக், ஸ்ரீவாத்சவா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

பூவா தலையா வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக அருண் குமாரும் விராட் கோஹ்லியும் களமிறங்கினர்.

கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அருண் குமார் இப்போட்டியில் ஓரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து விராட் கோஹ்லியுடன் மிஸ்பா உல் ஹக் ஜோடி சேர்ந்தார். கோஹ்லி நிதானமாக ஆட, மிஸ்பா உல் ஹக் அதிரடியாக விளையாடினார். அவர் 8 பந்துகளில் ஒரு சிக்ஸர், மூன்று பவுண்டரிகள் உள்பட 21 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்ரீசாந்த் பந்து வீச்சில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு களமிறங்கிய கேமரான் வொயிட் 10 ரன்களுக்கும், கோஹ்லி 21 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இவர்களையடுத்து பெங்களூர் அணியின் கேப்டன் ராகுல் திராவிட்டும் மார்க் பவுச்சரும் ஜோடி சேர்ந்தனர். கேப்டன் ராகுல் திராவிட் 26 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்த போது இர்பான் பதான் பந்து வீச்சில் ஸ்டம்புகளைப் பறிகொடுத்தார். அதன் பிறகு வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபுறம் அதிரடியாக ஆடிய பவுச்சர் 31 பந்துகளில் ஒரு சிக்ஸர், நான்கு பவுண்டரிகள் உள்பட 39 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

பெங்களூர் அணி தனது ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது.

பஞ்சாப் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஸ்ரீசாந்த் 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளையும், இர்பான் பதான், வி.ஆர்.வி.சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

குறிப்பாக வி.ஆர்.வி.சிங் மிகத்துல்லியமாக பந்துவீசி 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து பெங்களூர் அணியின் ரன் எடுக்கும் வேகத்தினை கட்டுப்படுத்தினார்.

இதையடுத்து 20 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கோடு களமிறங்கிய பஞ்சாப் அணி 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷான் மார்ஷும் ஜேம்ஸ் ஹோப்ஸும் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியை காட்டத் துவங்கினர்.

அதிரடியாக ஆடிய ஜேம்ஸ் ஹோப்ஸ் 19 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் உள்பட 27 ரன்கள் எடுத்திருந்த போது வினய்குமார் பந்துவீச்சில் ஸ்டெயினிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து ஷான் மார்ஷுடன் லூக் பொமர்ஸ் பேக் ஜோடி சேர்ந்தார். இவர்களிருவரும் பெங்களூர் அணியின் பந்து வீச்சை நான்கு புறமும் சிதறடித்தனர்.

ஸ்டெயின் வீசிய 11- வது ஓவரில் ஷான் மார்ஷ் 1 சிக்ஸர், மூன்று பவுண்டரிகள் உள்பட 21 ரன்களைக் குவித்தார். ஜாகீர்கான் வீசிய 15 வது ஓவரில் ஷான் மார்ஷ் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகளை விளாசினார்.

35 பந்துகளில் அரை சதத்தைக் கடந்த ஷான் மார்ஷ், சிறப்பாக விளையாடி 51 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் உள்பட 74 ரன்களும், லூக் பொமர்ஸ் பேக் 24 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 34 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆட்ட நாயகனாக பஞ்சாப் அணியின் ஷான் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகள் பெற்ற பஞ்சாப் அணி தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது. இத்தோல்வியால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெங்களூர் அணி முற்றிலும் இழந்தது.

இனி பெங்களூர் அணி விளையாடும் போட்டிகள் வெறும் சம்பிரதாய ஆட்டமாகவே இருக்கும்.

பஞ்சாப் அணியின் உரிமையாளரான பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா மைதானத்தில் இருந்தபடியே அவரது அணி வீரர்களை உற்சாகப் படுத்திக் கொண்டே இருந்தார்.

நன்றி, வணக்கம்.


Copyright © 2003-2008 CricketArchive CricketArchive Homepage Seasons Players Countries Grounds Records Tournaments Search Shop Contact www.cricketarchive.com