CricketArchive

பெங்களூர் அணியை வீழ்த்தியது டெல்லி அணி
by CricketArchive


Scorecard:Royal Challengers Bangalore v Delhi Daredevils
Player:SP Goswami
Event:Indian Premier League 2007/08

DateLine: 19th May 2008

 

போட்டி: 20 ஓவர்கள் போட்டி (இரவுப் போட்டி), 43-வது தகுதிச்சுற்று ஆட்டம
இடம்: சின்னசாமி கிரிக்கெட் மைதானம், பெங்களூர்.
தேதி: 19.05.2008. திங்கள் கிழமை.
மோதிய அணிகள: பெங்களூர் அணி - டெல்லி அணி
முடிவு: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி
ஆட்ட நாயகன: ஸ்ரீவாத்ஸ் கோஸ்வாமி

 

வணக்கம்

 

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டியின் 43-வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று இரவு பெங்களூரிலுள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பெங்களூர் அணியும் டெல்லி அணியும் மோதின. இதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற டெல்லி அணி தனது அரையிறுதி வாய்ப்பை பிரகாசப் படுத்திக் கொண்டுள்ளது.

 

கடந்த போட்டியில் விளையாடிய பெங்களூர் அணி வீரர்களான அருண்குமார், விராட் கோஹ்லி, தேவ்ராஜ் படீல், அப்துர் ரஸாக் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஜாக் காலிஸ், பரத் சிப்லி, பாலச்சந்திர அகில், டேல் ஸ்டெயின் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

 

அதே போல டெல்லி அணியிலும் அமித் மிஸ்ரா, ஷோயிப் மாலிக் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக யோ மகேஷ், டி வில்லியர்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

 

பூவா தலையா வென்ற டெல்லி அணி எதிரணியை முதலில் பேட்டிங் செய்யும்படி கேட்டுக் கொண்டது.

 

அதன்படி பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் காலிஸும் பரத் சிப்லியும் களமிறங்கினர். மிகவும் நிதானமாக ஆடிய பரத் சிப்லி 10 பந்துகளில் வெறும் 2 ரன்கள் மட்டும் எடுத்திருந்தபோது மெக்ரத் பந்துவீச்சில் ரஜத் பாடியாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

இவரையடுத்து ஜாக் காலிஸுடன் ஸ்ரீவாத்ஸ் கோஸ்வாமி ஜோடி சேர்ந்தார். ஜாக் காலிஸ் நிதானமாக ஆட, ஸ்ரீவாத்ஸ் கோஸ்வாமி அதிரடியாக விளையாடினார்.

 

ஜாக் காலிஸ் 21 பந்துகளில் ஒரு சிக்ஸர், மூன்று பவுண்டரிகள் உள்பட 25 ரன்கள் எடுத்திருந்தபோது மஹரூப் பந்து வீச்சில் தினேஷ் கார்த்திக்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

இவரையடுத்து ஸ்ரீவாத்ஸ் கோஸ்வாமியுடன் பெங்களூர் அணியின் கேப்டன் ராகுல் திராவிட் ஜோடி சேர்ந்தார். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய திராவிட் இப்போட்டியில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

 

இவரையடுத்து ஸ்ரீவாத்ஸ் கோஸ்வாமியுடன் மிஸ்பா உல் ஹக் ஜோடி சேர்ந்தார். இருவரும் எதிரணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.

 

சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கோஸ்வாமி 42 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகள் உள்பட 52 ரன்கள் எடுத்திருந்தபோது மஹரூப் பந்து வீச்சில் தில்ஷானிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

இவரையடுத்து மிஸ்பா உல் ஹக்குடன் ஜோடி சேர்ந்த வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

 

கேமரான் வொயிட் 1 ரன்களும் பாலச்சந்திர அகில் 3 ரன்களும் பிரவீண் குமார் 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

 

ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபுறம் அதிரடியாக ஆடிய மிஸ்பா உல் ஹக் 25 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 47 ரன்கள் குவித்தும் ஜாகீர் கான் 4 ரன்கள் எடுத்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

பெங்களூர் அணி தனது ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை எடுத்தது.

 

டெல்லி அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய மெக்ரத், மஹரூப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தில்ஷான் 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.

 

மஹரூப்பும் மெக்ரத்தும் மிகத்துல்லியமாக பந்துவீசி 4 ஓவர்களில் முறையே 13, 15 ரன்கள் மட்டுமே கொடுத்து பெங்களூர் அணியின் ரன் எடுக்கும் வேகத்தினை கட்டுப்படுத்தினர்.

 

இவர்களுக்கு நேர்மாறாக சங்வான் 3 ஓவர்கள் மட்டுமே வீசி 51 ரன்களை வாரி வழங்கினார். ரஜத் பாடியா 4 ஓவர்கள் வீசி 47 ரன்களை வாரி வழங்கினார்.

 

இதையடுத்து 20 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு டெல்லி அணி களமிறங்கியது.

 

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வீரேந்திர ஷேவாக்கும், கெளதம் காம்பீரும் ஆரம்பம் முதலே தங்களது அதிரடியை காட்டத் தொடங்கினர்.

 

வீரேந்திர ஷேவாக் சுனாமியாக சுழன்றடித்தார். அவர் 19 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகள் உள்பட 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தபோது அணியின் எண்ணிக்கை ஏழே ஓவரில் 90 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

கெளதம் காம்பீர் 31 பந்துகளில் 6 பவுண்டரிகள் உள்பட 39 ரன்கள் எடுத்திருந்தபோது ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

 

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டி தொடங்கியதிலிருந்தே சிறப்பாக விளையாடி வரும் கெளதம் காம்பீர் இப்போட்டியில் 35 ரன்களைக் கடந்தபோது, இப்போட்டித் தொடரில் 500 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

 

இவர்களையடுத்து வந்த டி வில்லியர்ஸ் 21 ரன்களும் தில்ஷான் 4 ரன்களும் தினேஷ் கார்த்திக் 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

 

ஷீகர் தவான் 16 ரன்களுடனும் பர்வீஸ் மஹரூப் 16 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்த டெல்லி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

பெங்களூர் அணி சார்பில் அனில் கும்ப்ளே 2 விக்கெட்டுகளையும் பிரவீண் குமார், டேல் ஸ்டெயின் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

 

ஆட்ட நாயகனாக பெங்களூர் அணியின் ஸ்ரீவாத்ஸ் கோஸ்வாமி தேர்வு செய்யப்பட்டார்.

 

பெங்களூர் அணி பெற்ற இத்தோல்வியால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை முற்றிலும் இழந்தது. இனி பெங்களூர் அணி விளையாடும் போட்டிகள் ஆறாம் இடத்தையோ, ஏழாம் இடத்தையோ பிடிக்கும் சம்பிரதாய ஆட்டமாகவே இருக்கும்.

 

நன்றி, வணக்கம்.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive