CricketArchive

இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!
by CricketArchive


Scorecard:Bangladesh v India
Player:G Gambhir
Event:Kitply Cup 2008

DateLine: 13th June 2008

 

போட்டி: 50 ஓவர்கள் போட்டி (பகலிரவுப் போட்டி)
இடம்: ஷேரே பங்ளா நேஷனல் மைதானம். மிர்பூர்.
தேதி: 12.06.2008. வெள்ளிக்கிழமை.
மோதிய அணிகள்: வங்கதேச அணி - இந்திய அணி
முடிவு: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
ஆட்ட நாயகன்: கௌதம் காம்பீர்.

 

வணக்கம்

 

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் கடைசி தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய அணி, வங்கதேச அணியை அதன் சொந்த மண்ணில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு எளிதாக முன்னேறியது.

 

இந்திய அணியில் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக ஆர்.பி.சிங் வாய்ப்பு பெற்றார். வங்கதேச அணியில் ஷஹதாத் ஹுசைன் நீக்கப்பட்டு, ‘சுழற்பந்து வீச்சாளர்’ பர்கத் ரேசா இடம் பெற்றார்.

 

பூவா தலையா வென்ற வங்கதேச கேப்டன் அஷ்ரபுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். பாகிஸ்தானுக்கு எதிராக இமாலய வெற்றி பெற்ற உற்சாகத்தில் இந்திய அணி பந்துவீச களமிறங்கியது.

 

வங்கதேச அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. பிரவீண் குமார் வீசிய முதல் ஓவரில் தமிம் இக்பால் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷஹாரியார் நபீஸ் 9 ரன்களுக்கு ஆர்.பி.சிங் பந்துவீச்சில் வெளியேற வங்கதேசத்தின் நிலை பரிதாபகரமானது.

 

முதல் 7 ஓவர்களில் 8 ரன்களை மட்டுமே கொடுத்து ஓரு விக்கெட்டைக் கைப்பற்றிய பிரவீண் குமார் வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

 

ஆனால், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் முகமது அஷ்ரபுல், ரகிபுல் ஹஸன் ஆகியோர் பொறுப்புடன் விளையாடினர். படுநிதானமாக ஆடிய அஷ்ரபுல் 67 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 36 ரன்களுக்கு வெளியேறினார். இவரை யூசுப் பதான் வெளியேற்றினார். சர்வதேச போட்டிகளில் இவர் வீழ்த்தும் முதல் விக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பின்னர் வந்தவர்களில் அலோக் கபாலி 26 பந்துகளில் 20 ரன்களும், மஹ்முதுல்லா 27 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களும் எடுத்து மந்தமாக இருந்த ஆட்டத்தை விறுவிறுப்பாக்கினர்.

 

ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபுறம் உறுதிமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்திய ரகிபுல் ஹசன் 117 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் குவித்து அணி 200 ரன்கள் எட்டும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன் எடுத்த வங்கதேச வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார். இதற்கு முன் ராஜன் சலே 2004 -ல், 82 ரன்கள் எடுத்திருந்தார். சேவக் சுழலில் ஒரு சிக்சர் அடித்த மொர்டசா 13 ரன்கள் எடுத்தார்.

 

இருப்பினும் கடைசி 4 விக்கெட்டுகளை 26 ரன்களுக்கு இழந்ததால் வங்கதேசம் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களைக் குவிக்க முடியவில்லை.

 

இறுதியில் வங்கதேச அணி 49.5 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு மீண்டும் ஒரு முறை வீரேந்திர சேவக், கௌதம் காம்பிர் இணைந்து அசத்தல் துவக்கம் தந்தனர். ‘சூப்பர் பார்மில்’ இருக்கும் சேவக் வெளுத்து வாங்கினார். பர்கத் ரேசா வீசிய 6வது ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசினார். பர்கத் வீசிய 8வது ஓவரில் காம்பிர் 3 பவுண்டரிகள் விளாச... அணியின் எண்ணிக்கை படுவேகமாக உயர்ந்தது.

 

டாலர் முகமது வீசிய 10வது ஓவரில் அடித்து நொறுக்கினார் சேவக். இரண்டு பவுண்டரிகள், இரண்டு சிக்சர் அடித்து தூள் கிளப்பினார். இந்த ஓவரில் மட்டும் 24 ரன்கள் கிடைத்தது. 29 பந்துகளில் மிக வேகமாக அரைசதம் கடந்த சேவக் 32 பந்துகளில் 2 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வங்கதேச அணிக்கு எதிராக மிகக் குறைந்த பந்துகளில் அரை சதம் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் சேவக். 22 பந்துகளில் அரை சதம் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை யுவராஜ் சிங் முன்பே நிகழ்த்தியிருந்தார்.

 

ரோஹித் சர்மா, யுவராஜ் சிங் ஆகியோர் தலா 26 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர்.

 

அபார ஆட்டத்தை தொடர்ந்த கௌதம் காம்பிர் ஒரு நாள் அரங்கில் தனது 5வது சதம் கடந்து அசத்தினார். அவர், அபாரமாக விளையாடி 101 பந்துகளில் ஆட்டமிழக்காமல் ஓரு சிக்சர், 13 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் விளாசினார்.

 

இந்திய அணி 35.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

 

வங்கதேசம் தான் விளையாடிய இரு தகுதிச் சுற்று ஆட்டங்களிலும் தோல்வியுற்றதால், அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

 

நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் பரம வைரிகளான இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

 

வங்கதேச பேட்ஸ்மேன் ரகிபுல் ஹஸனை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை இந்தியாவின் ஆர்.பி.சிங் எட்டினார். இவர் இதுவரை 39 ஒருதினப் போட்டிகளில் மொத்தம் 51 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

 

நன்றி, வணக்கம்.

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive