CricketArchive

மைக் ஹஸ்ஸி
by CricketArchive


Player:MEK Hussey

DateLine: 30th August 2008

 

முழுப்பெயர்: மைக்கேல் எட்வர்ட் கிலீன் ஹஸ்ஸி

 

பிறப்பு: 27 மே 1975, மோர்லே, மேற்கு ஆஸ்திரேலியா.

 

மட்டை வீச்சு முறை: இடதுகை ஆட்டக்காரர்

 

பந்து வீச்சு முறை: வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளர்

 

விளையாடிய அணிகள்: ஆஸ்திரேலியா, சென்னை சூப்பர் கிங்ஸ், துர்ஹாம், க்ளோசெஸ்டர்ஷையர், நார்த்தாம்ப்டன்ஷையர், மேற்கு ஆஸ்திரேலியா.

 

உறவினர்: டேவிட் ஹஸ்ஸி (தம்பி) அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: நவம்பர் 3-6, 2005, ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையே பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.
ஒருதினப் போட்டி: பிப்ரவரி 1, 2004 அன்று ஆஸ்திரேலியா - இந்தியா இடையே பெர்த்தில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஜூன் 13, 2003 அன்று வொர்செஸ்டர்ஷையர் - நார்த்தாம்ப்டன்ஷையர் இடையே வொர்செஸ்டரில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

ஆஸ்திரேலிய அணியின் பலம் வாய்ந்த நடுவரிசை ஆட்டக்காரர். ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக துணைக் கேப்டன். இவரது தம்பி டேவிட் ஹஸியும் ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரர் ஆவர்.

 

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மோர்லே நகரத்தில் பிறந்து வளர்ந்தவர். 1994-ல் கிரிக்கெட் உலகில் காலடி எடுத்து வைத்தார். இளம் வயதில் மேற்கு ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடினார். 1994 நவம்பரில் டான்சானியா அணிக்கும், மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே நடைபெற்ற முதல்தரப் போட்டியில் முதன் முதலாக அறிமுகமானார். இப்போட்டியில் இவர் துவக்க வீரராக களமிறங்கினார்.

 

அன்று முதல் அவர் சர்வதேச அணியில் இடம் பிடிக்கும் வரை, அவர் முதல்தரப் போட்டிகளில் அடித்த ரன்களின் எண்ணிக்கை 15313 ஆகும். இதனால் இவரை மிஸ்டர். கிரிக்கெட் என்றே செல்லமாக பெயரிட்டு அழைத்தனர். இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் இவர் எவ்வளவு திறமையான வீரர் என்று.

 

இவரது திறமையைக் தாமதமாகக் கண்டுகொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், இவரை 2004-நவம்பரில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருதினத் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய ஒருதின அணியில் சேர்த்தது.

 

பிப்ரவரி 1, 2004 அன்று ஆஸ்திரேலியா - இந்தியா இடையே பெர்த்தில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் சர்வதேச அளவில் முதன் முதலாக அறிமுகமானார். இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 17 ரன்கள் எடுத்திருந்தார்.

 

இதையடுத்து 2005-ல் நியுசிலாந்துக்கெதிரான ஒருதினத் தொடரில் இடம்பிடித்து விளையாடினார். இரு அணிகளுக்கம் இடையேயான மூன்றாவது ஓருதினப்போட்டியில், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் குவித்து, தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

 

இதன்பிறகு 2005-ல் இங்கிலாந்து சென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தார். இத்தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 2 அரை சதங்கள் உள்பட 273 ரன்கள் எடுத்தார். சராசரி 91.00 இருந்தது.

 

ஒருதின ஆட்டங்களில் சிறப்பாக ஆடியதை அடுத்து அக்டோபர் 2005-ல் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்தார். இரு அணிகளுக்கும் இடையே, பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில், டெஸ்ட் அறிமுகத்தை பெற்றார். இப்போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதே அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 137 ரன்களும், 31 ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இது இவருடைய இரண்டாவது டெஸ்ட் என்பதும், டெஸ்ட் அரங்கில் இவரது முதல் சதம் இது என்பதும் கூடுதல் சிறப்பு. மேலும் இத்தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 சதம் உள்பட 361 ரன்கள் குவித்தார். சராசரி 120.33 ரன்கள்.

 

இதன் பிறகு, டெஸ்ட் அரங்கில் இவர் தொட்டதெல்லாம் ரன்னாக மாறின. இவர் டெஸ்ட் அரங்கில் காலடி வைத்த குறைந்த நாட்களிலேயே 1000 ரன்களைத் தொட்டு புதிய சாதனை படைத்தார். அதாவது 166 நாட்களில் 1000 ரன்களை கடந்து, இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ ஸ்ராஸ்ஸின் சாதனையை முறியடித்தார். இதன்பிறகு டெஸ்ட் அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

 

ஏப்ரல்-2006-ல் வங்கதேசம் சென்று விளையாடிய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். இரு அணிகளுக்கும் இடையே சிட்டாகாங்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் கில்லெஸ்பியுடன் சேர்ந்து அணியினை வெற்றி பெற வைத்தார். இதில் கில்லெஸ்பி 201 ரன்களும், இவர் 182 ரன்களும் குவித்தனர். டெஸ்ட் அரங்கில் மைக் ஹஸ்ஸியின் அதிக பட்ச ரன் இதுவாகும்.

 

டெஸ்ட் அரங்கில் 25 போட்டிகளில் விளையாடிய இவர் 8 சதங்களும், 9 அரைசதங்களும் விளாசியுள்ளார். இதன் சராசரி 68.38 ஆகும்.

 

செப்டம்பர் 2006, கோலாலம்பூரில் டிஎல்எப் கோப்பைக்கான முத்தரப்பு தொடரில் இந்தியா, ஆஸ்திரலியா, மேற்கிந்தியத் தீவுகள் மோதின. இத்தொடரில் ஆஸ்திரேலிய அணியும், மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மோதிய ஒருதினப்போட்டியில் அபாரமாக ஆடிய இவர் 90 பந்துகளில் 109 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு தின அரங்கில் இவரத் முதல் சதமும் இதுவே. இப்போட்டியில் ஆஸ்திரேலியா தோற்றாலும், ஆட்டநாயகன் விருது இவருக்கே கிடைத்தது. இத்தொடரில் 3 ஆட்டங்களில் விளையாடி 152 ரன்கள் எடுத்தார். ஆட்ட சராசரி 152.00 ரன்கள்.

 

2007 பிப்ரவரியில் நியுசிலாந்து சென்ற ஆஸ்திரேலிய ஒருதின அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையே ஆக்லாந்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 336 ரன்கள் குவித்தது. இவர் 84 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 105 ரன்கள் குவித்தார். இதையடுத்து ஆடிய நியுசிலாந்து அணி 340 ரன்கள் குவித்து வெற்றி பெற்று விட்டது. மூன்றாவது போட்டியும் இதே நிலைதான். இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.

 

இத்தொடரில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதிய முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் 54 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 116 ரன்கள் கடந்து 20 ஓவர் போட்டிகளில் புதிய சாதனை படைத்தார்.

 

இவரது அணிக்காக, மொத்தம் 4 போட்டிகளில் விளையாடி 1 சதம் உள்பட 168 ரன்கள் குவித்தார். இந்த அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது என்பது குறிப்பிடத் தக்கது.

 

தற்போது வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற இருக்கும் ஒரு தினத் தொடரில் கலந்து கொள்ளும் ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டானாக மைக் ஹஸ்ஸி அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

வெளியான தேதி: 28.8.08

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive