CricketArchive

அக்தரின் பந்துவீச்சால் கொல்கத்தா வெற்றி
by CricketArchive


Scorecard:Kolkata Knight Riders v Delhi Daredevils
Player:Shoaib Akhtar
Event:Indian Premier League 2007/08

DateLine: 13th May 2008

 

போட்டி: 20 ஓவர்கள் போட்டி (இரவு ஆட்டம்), 35-வது தகுதிச்சுற்று ஆட்டம்
இடம்: ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா.
தேதி: 13.05.2008. செவ்வாய்க் கிழமை.
மோதிய அணிகள்: கொல்கத்தா அணி - டெல்லி அணி.
முடிவு: 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி.
ஆட்ட நாயகன்: சோயிப் அக்தர்

 

வணக்கம்

 

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டியின் 35-வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று இரவு கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

 

இப்போட்டியில் கொல்கத்தா அணியும் டெல்லி அணியும் மோதின. இதில் 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

 

கடந்த போட்டியில் விளையாடிய கொல்கத்தா வீரர்களான முரளி கார்த்திக், உமர் குல் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக இக்பால் அப்துல்லா, பாகிஸ்தானின் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் சோயிப் அக்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

 

அதே போல டெல்லி அணியிலும் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக மனோஜ் திவாரி சேர்க்கப்பட்டிருந்தார்.

 

பூவா தலையா வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

சல்மான் பட்டுடன் துவக்க ஆட்டக்காரராக ஆகாஷ் சோப்ரா களமிறங்கினார். நிதானமாக ஆடிய ஆகாஷ் சோப்ரா 13 ரன்கள் எடுத்து சங்வான் பந்து வீச்சில் மஹரூப்பிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

இதையடுத்து சல்மான் பட்டுடன் கொல்கத்தா அணியின் கேப்டன் சௌரவ் கங்குலி ஜோடி சேர்ந்தார். சொந்த மண்ணில் களமிறங்கிய கங்குலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நினைத்திருந்த உள்ளூர் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யாமல், 1 சிக்ஸர் உள்பட 7 ரன்கள் அடித்த திருப்தியோடு யோமகேஷ் பந்து வீச்சில் ஸ்டம்புகளை பறிகொடுத்து ஆட்டமிழந்தார்.

 

இவரையடுத்து சல்மான் பட்டுடன் டேவிட் ஹஸி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியின் எண்ணிக்கையை மெதுவாக உயர்த்தினர்.

 

சல்மான் பட் 48 பந்துகளில் 7 பவுண்டரிகள் உள்பட 48 ரன்கள் எடுத்திருந்த போது யோமகேஷ் பந்து வீச்சில் மெக்ரத்திடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இவரையடுத்து வந்த வீரர்களான தடேன்டா டைபு 7 ரன்களிலும் லக்ஷ்மி சுக்லா 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

 

டேவிட் ஹஸி 31 பந்துகளில் இரண்டு சிக்ஸர் உள்பட 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விரித்தமன் சஹா 5 ரன்களுடனும் இக்பால் அப்துல்லா 1 ரன்னுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

ஆட்ட நேர முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி சார்பில் யோ மகேஷ், மஹரூப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சங்வான் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இந்த அணியினரின் பந்து வீச்சும் பீல்டிங்கும் இப்போட்டியில் சிறப்பாக இருந்தது.

 

இதன் காரணமாக ஆரம்பம் முதலே ரன் சேர்க்கத் தடுமாறிய கொல்கத்தா அணி மொத்தம் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் மட்டுமே விளாசியது.

 

இதையடுத்து 20 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கோடு களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் சோயிப் அக்தர்.

 

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வீரேந்திர ஷேவாக்கினை முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் வெளியேற்றினார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் அக்தர் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் விரித்தமன் சஹாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

இவரையடுத்து கெளதம் காம்பீரும் டிவில்லியர்ஸும் ஜோடி சேர்ந்தனர். இவர்களது கூட்டணியும் அக்தரின் பந்து வீச்சிற்கு முன் நிலைக்கவில்லை.

 

கெளதம் காம்பீர் 10 ரன்களும், டி வில்லியர்ஸ் 7 ரன்களும் இவர்களையடுத்து வந்த மனோஜ் திவாரி 9 ரன்களும் எடுத்திருந்தபோது சோயிப் அக்தர் பந்து வீச்சிற்கு பலியானார்கள்.

 

ஷீகர் தவான் 7 ரன்கள் எடுத்திருந்த போது அசோக் திந்தா பந்து வீச்சில் ஸ்டம்புகளை பறிகொடுத்து ஆட்டமிழந்தார்.

 

டெல்லி அணி 7.3 ஓவர்களில் 43 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

 

தில்ஷான், அமித் மிஸ்ரா ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து ஆடியது. அதிரடியைக் காட்டிய தில்ஷான் 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து வந்த மஹரூப்பும் 10 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

 

டெல்லி அணி 17 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டெல்லி அணி இருந்தது.

 

அப்போது 18 வது ஓவரை லக்ஷ்மி சுக்லா வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் மிஸ்ரா வீழ்ந்தார். அவர் எடுத்திருந்த 31 ரன்களே டெல்லி அணியில் அதிகபட்ச ரன்னாக இருந்தது.

 

அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் சங்வான் வீழ்ந்தார். அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் கடைசி விக்கெட்டாக யோமகேஷ் வீழ்ந்தார்.

 

இதனால் டெல்லி அணி 17.5 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், கொல்கத்தா அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

கொல்கத்தா அணி சார்பில் சோயிப் அக்தர் அபாரமாக பந்து வீசி 3 ஓவர்களில் 11 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். லக்ஷ்மி சுக்லா 5 பந்துகளில் 6 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அசோக் திந்தா 1 விக்கெட்டினை கைப்பற்றினார்.

 

கொல்கத்தா அணியின் உரிமையாளரான பாலிவுட் நடிகர் ஷாருக்கான் களத்தில் இருந்தபடியே அவரது அணி வீரர்களையும், ரசிகர்களையும் உற்சாகப் படுத்திக் கொண்டே இருந்தார்.

 

3 விக்கெட்டுகளை கைப்பற்றிய லக்ஷ்மி சுக்லா களத்திலிருந்து ஓடி வந்து ஷாருக்கானை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 

அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சோயிப் அக்தர் அருகில் வந்ததும் ஷாருக்கான் அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 

இப்போட்டியில் கொல்கத்தா அணியின் பந்து வீச்சும், பீல்டிங்கும் டெல்லி அணியை விட சிறப்பாக இருந்தது.

 

ஆட்டநாயகனாக கொல்கத்தா அணியின் வீரர் சோயிப் அக்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2025 CricketArchive