CricketArchive

ஜெயசூர்யா அதிரடியால் மும்பை அணி வெற்றி
by CricketArchive


Scorecard:Mumbai Indians v Chennai Super Kings
Player:ST Jayasuriya
Event:Indian Premier League 2007/08

DateLine: 15th May 2008

 

போட்டி : 20 ஓவர்கள் போட்டி (இரவுப் போட்டி), 36-வது தகுதிச் சுற்று ஆட்டம்.
இடம் : வான்கடே மைதானம். மும்பை.
தேதி : 14.05.2008. புதன் கிழமை.
மோதிய அணிகள் : சென்னை அணி - மும்பை அணி
முடிவு : 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி
ஆட்ட நாயகன் : சனத் ஜெயசூர்யா

 

வணக்கம்

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டித் தொடரின் 36-வது ஆட்டம் இன்று இரவு மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதின. இதில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

கடந்த போட்டியில் விளையாடிய சென்னை அணி வீரரான பழனி அமர்நாத் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஜோஹீந்தர் சர்மா சேர்க்கப்பட்டார்.

அதே போல மும்பை அணியிலும் சௌரப் திவாரி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக, இதுவரை காயம் காரணமாக விளையாடாமல் இருந்த மும்பை அணியின் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் சேர்க்கப்பட்டார்.

கடந்த போட்டிவரை மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்ட ஷான் பொல்லாக்கிற்கு பதிலாக இப்போட்டியில் சச்சின் தெண்டுல்கர் கேப்டனாக பொறுப்பேற்று விளையாடினார்.

பூவா தலையா வென்ற மும்பை அணியின் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் முதலில் எதிரணியை பேட்டிங் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

அதன்படி சென்னை அணியின் வித்யுத் சிவராமகிருஷ்ணனும், ஸ்டீபன் பிளெமிங்கும் தொடக்க ஆட்டக்கார்ரகளாக களமிறங்கினர்.

ஆட்டத்தின் முதல் ஓவரை ஷான் பொல்லாக் வீசினார். அந்த ஓவரில் 1 ரன் மட்டுமெ விட்டுக் கொடுத்தார். இரண்டாவது ஓவரை ஆஷிஷ் நெஹ்ரா வீச, அந்த ஓவரில் வித்யுத் சிவராமகிருஷ்ணன் மூன்று பவுண்டரிகள் விளாசினார்.

மூன்றாவது ஓவரை மறுபடியும் ஷான் பொல்லாக் வீச, அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் வித்யுத் சிவராமகிருஷ்ணன் 16 ரன்கள் எடுத்திருந்த போது ரஜேவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து ஸ்டீபன் பிளெமிங்குடன் சுரேஷ் ராய்னா ஜோடி சேர்ந்தார். நன்றாக ஆடுவார் என்று எதிர்பார்கப்பட்ட சுரேஷ் ராய்னா 1 ரன் எடுத்த திருப்தியில் பிராவோ பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் தகாவாலேவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து ஸ்டீபன் பிளெமிங்குடன் சுப்ரமணியம் பத்ரிநாத் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய பிளெமிங் 26 ரன்கள் எடுத்திருந்த போது தவால் குல்கர்னி பந்து வீச்சில் ஸ்டம்புகளை பறி கொடுத்து ஆட்டமிழந்தார். இவரையடுத்து வந்த கபுகேதராவும் ரன் ஏதும் எடுக்காத நிலையில் தவால் குல்கர்னி பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் தகாவாலேவிடம் பிடி கொடுத்து, வந்த வேகத்திலேயே வெளியேறினார்.

8.5 ஓவர்களில் 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தத்தளித்து கொண்டிருந்த போது அந்த அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி, சுப்ரமணியம் பத்ரிநாத்துடன் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் ஆரம்பத்தில் மிகவும் நிதானமாக விளையாடினர்.

இந்நிலையில் 11 ஓவரை ஷான் பொல்லாக் வீச, அந்த ஓவரை எதிர்கொண்ட மஹேந்திரசிங் தோனி தடுமாறியபடியே ஆடினார். மிகச்சிறப்பாக பந்து வீசிய பொல்லாக் அந்த ஓவரில் ரன் ஏதும் கொடுக்காமல் மெய்டன் ஓவராக வீசினார்.

11 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அதுவரை பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்த தோனியும், பத்ரிநாத்தும் அதிரடிக்கு மாறினர்.

அதிரடியாக விளையாடிய சுப்ரமணியம் பத்ரிநாத் 33 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள், ஏழு பவுண்டரிகள் உள்பட 53 ரன்கள் எடுத்திருந்த போது பிராவோ பந்து வீச்சில் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து மஹேந்திரசிங் தோனியுடன் அல்பி மோர்கெல் ஜோடி சேர்ந்தார்.

மஹேந்திரசிங் தோனி 35 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகள் உள்பட 43 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அல்பி மோர்கெல் 5 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

ஆட்ட நேர முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது.

மும்பை அணி சார்பில் ஷான் பொல்லாக் மிகச்சிறப்பாக பந்துவீசி சென்னை அணியின் ரன் எடுக்கும் வேகத்தினை கட்டுப்படுத்தினார். அவர் 4 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டினை வீழ்த்தினார். தவால் குல்கர்னி 3 விக்கெட்டுகளையும், ஆஷிஷ் நெஹ்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

சச்சின் தெண்டுல்கரின் தலைமையில் செயல்பட்ட மும்பை அணி இந்த ஆட்டத்தில் சிறப்பான பீல்டிங்கை வெளிப்படுத்தியது.

20 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய மும்பை அணி 13.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சனத் ஜெயசூர்யாவும் மும்பை அணியின் கேப்டன் சச்சின் தெண்டுல்கரும் களமிறங்கினர்.

இருவரும் ஆரம்பம் முதலே தங்களது அதிரடியை காட்டத் தொடங்கினர். சச்சின் தெண்டுல்கர் 1 சிக்ஸர், 1 பவுண்டரி உள்பட 12 ரன்கள் எடுத்திருந்த போது ஜோஹீந்தர் சர்மா பந்து வீச்சில் ஸ்டம்புகளை பறிகொடுத்து ஆட்டமிழந்தார்.

சச்சின் ஆட்டமிழந்தபோது மும்பை அணி 7.2 ஓவர்களில் 82 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

இவரையடுத்து சனத் ஜெயசூர்யாவுடன் ராபின் உத்தப்பா ஜோடி சேர்ந்தார்.

ஆட்டத்தை அதிக நேரம் வளர்க்க விரும்பாத சனத் ஜெயசூர்யா ஆரம்பத்திலிருந்தே சென்னை அணியினரின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். சச்சின் ஆட்டத்தை காண வந்த உள்ளூர் ரசிகர்கள் சனத் ஜெயசூர்யாவின் வாணவேடிக்கை ஆட்டத்தைக் கண்டு ஆர்ப்பரித்தனர்.

25 பந்துகளில் 6 சிக்ஸர்கள், மூன்று பவுண்டரிகளுடன் அரை சதத்தைக் கடந்த சனத் ஜெயசூர்யா, 45 பந்துகளில் 11 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 114 ரன்களைக் குவித்தும், ராபின் உத்தப்பா 16 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக சனத் ஜெயசூர்யா தேர்வு செய்யப்பட்டார்.

மும்பை அணி 13. 5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது.

மும்பை அணியின் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் தான் விளையாடிய முதல் ஆட்டத்திலேயே வெற்றிக் கனியை பறித்துள்ளார். இதே நிலை வரும் ஆட்டங்களிலும் தொடருமானால் மும்பை அணி அரை இறுதிப்போட்டிக்குள் நுழைவது உறுதி.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2025 CricketArchive