CricketArchive

பெங்களூரிடம் தோல்வியடைந்த சென்னை அணி
by CricketArchive


Scorecard:Chennai Super Kings v Royal Challengers Bangalore
Player:A Kumble
Event:Indian Premier League 2007/08

DateLine: 21st May 2008

 

போட்டி: 20 ஓவர்கள் போட்டி (இரவுப் போட்டி), 46-வது தகுதிச்சுற்று ஆட்டம்
இடம்: எம்.ஏ. சிதம்பரம் மைதானம். சேப்பாக்கம், சென்னை.
தேதி: 21.05.2008. புதன் கிழமை.
மோதிய அணிகள்: பெங்களூர் அணி - சென்னை அணி
முடிவு: 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி
ஆட்ட நாயகன்: அனில் கும்ப்ளே

 

வணக்கம்

 

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டித் தொடரின் 46-வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பெங்களூர் அணியும், சென்னை அணியும் மோதின. இதில் 14 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது சென்னை அணி.

 

இந்த ஆட்டம் மழை காரணமாக 15 நிமிடம் தாமதமாகத் தொடங்கப்பட்டது.

 

பூவா தலையா வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

 

அதன்படி ஜாக் காலிஸும், கோஸ்வாமியும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

 

ஆனால் இவர்கள் மட்டுமல்ல, அணியின் ஓட்டு மொத்த ஆட்டமும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கவில்லை. 20 ஓவர்கள் போட்டி என்பதை மறந்து டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போல் விளையாடினர்.

 

2-வது ஓவரில் ஜாக் காலிஸும், 6-வது ஓவரில் கோஸ்வாமியும் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். அவர்களிருவரும் சென்னை அணி வீரர் மன்பிரீத் கோனியின் துடிப்பான பந்துவீச்சில் வெளியேறினர்.

 

அதன் பின்னரும் ஆட்டத்தில் சுறுசுறுப்பு காணப்படவில்லை. 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்களையே பெங்களூர் அணி சேர்த்திருந்தது. இதனால் அந்த அணி 100 ரன்களைக் கடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

 

ஆனால், கேப்டன் திராவிட்டின் ஆட்டம், அந்த சந்தேகத்தைப் போக்கியது. அணியின் எண்ணிக்கை 97 ஆக இருந்தபோது 6-வது விக்கெட்டாக அவர் வீழ்ந்தார். 39 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 47 ரன்களைச் சேர்த்து வெளியேறினார் அவர்.

 

அதன் பின்னர் பிரவீண்குமாரின் ஆட்டம், அணியின் எண்ணிக்கையை சிறிது உயர்த்தியது. இவர் 11 பந்துகளில் 21 ரன்களைச் சேர்த்தார். அணிக்கு கிடைத்த ஓரே சிக்ஸர், இவர் அடித்தது. 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை பெங்களூர் அணி சேர்த்தது.

 

ஆட்டத்தின் கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் "ஹாட்ரிக் விக்கெட்' வீழ்த்தும் வாய்ப்பு அல்பி மோர்கெலுக்குக் கிடைத்தது. ஆனால் அதில் வெற்றி காணமுடியவில்லை. இவர், 32 ரன்களைக் கொடுத்து அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மன்பிரீத் கோனி 2 விக்கெட்டுகளையும், முரளிதரன், பாலாஜி ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

 

20 ஓவகளில் 127 ரன்களைச் சேர்த்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆட்டத்தைத் தொடங்கிய சென்னை அணி, ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்களை மட்டுமே சேர்த்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

 

சென்னை அணியின் இன்னிங்ஸில் ஸ்டீபன் பிளெமிங் - பார்தீவ் படேல் தொடக்க ஜோடியின் ஆட்டத்தைத் தவிர, சொல்லிக் கொள்ள ஏதுமில்லை. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்களைக் குவித்தது. பெங்களூர் அணியை விட படு மோசமாக இருந்தது சென்னை அணியின் பேட்டிங்.

 

பார்தீவ் படேல் 29 பந்துகளில் 4 பவுண்டரிகள் உள்பட 24 ரன்கள் எடுத்தும், ஸ்டீபன் பிளெமிங் 40 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 45 ரன்கள் எடுத்தும் கும்ப்ளே பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

 

அதன்பிறகு குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து கடும் நெருக்குதலைப் பெற்றது சென்னை அணி. கேப்டன் தோனி 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியில், அணியின் வெற்றிக்கு சுரேஷ் ராய்னா போராடினார். ஆனால் அதுவும் ஏமாற்றத்தில் முடிந்தது. இவர் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

பெங்களூர் அணி சார்பில் கும்ப்ளே அனில் கும்ப்ளே அபாரமாக பந்து வீசி 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்கடுத்து டேல் ஸ்டெயின் 4 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரவீண் குமாரும், வினய் குமாரும் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

 

ஏற்கெனவே 14 புள்ளிகளுடன் இருந்த சென்னை அணிக்கு இந்த இட்டத்தின் வெற்றி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் விதமாக அமைந்திருந்தது. ஆனால் இந்த ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியதால் மீதமுள்ள 2 ஆட்டங்களின் முடிவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

அடுத்து, வரும் 24-ம் தேதி சேப்பாக்கத்தில் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் அணியுடனும், 27-ம் தேதி ஹைதராபாத்தில் டெக்கான் அணியுடனும் சென்னை அணி விளையாட உள்ளது.

 

ஏற்கெனவே 9 தோல்விகளுடன் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ள திராவிட் அணிக்கு, இந்த வெற்றி ஆறுதலாக அமைந்தது.

 

அனில் கும்ப்ளே ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

 

ஆட்டம் முடிந்ததும் சென்னை அணி தோல்வியடைந்த்து குறித்து அந்த அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி கூறியதாவது ''பேட்ஸ்மேன்கள் பந்துகளை தவறான முறையில்ல அடித்து ஆட்டமிழந்தனர்.

 

எளிதாக வெற்றிபெறக்கூடிய இலக்குதான். ஒருவர் நிலைத்து நின்று ஆடியிருந்தால் அணி வெற்றி பெற்றிருக்கும். ஆனால் யாரும் அப்பணியைச் செய்யவில்லை. அணி தோற்றதுக்கு அணியின் மோசமான பேட்டிங்கே காரணம்.

 

ராஜஸ்தான் அணியுடன் மோதவுள்ள அடுத்த போட்டியில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு தகுதி பெற முயற்சிப்போம் என்றார் மஹேந்திரசிங் தோனி.

 

வெற்றி குறித்து திராவிட் கூறுகையில் ''இந்த வெற்றிக்கு எங்களது அணியின் பந்து வீச்சாளர்களே முக்கிய காரணம். குறிப்பாக அனில் கும்ப்ளே 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அணி வெற்றிபெற பெரிதும் உதவினார்.

 

கடைசி இரண்டு ஓவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்று யாராலும் கணித்திருக்க முடியாது. பிளெமிங்கை ஆட்டமிழக்கச் செய்ததும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு எங்கள் பக்கம் வந்து விட்டது. தொடர்ச்சியாக பெற்ற 5 தோல்விகளுக்குப் பிறகு வெற்றிபெற்றிருக்கிறோம் என்றார் திராவிட்.

 

நன்றி, வணக்கம்.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2025 CricketArchive