CricketArchive

அரை இறுதிக்குள் நுழைந்தது பஞ்சாப் அணி
by CricketArchive


Scorecard:Kings XI Punjab v Deccan Chargers
Player:SE Marsh
Event:Indian Premier League 2007/08

DateLine: 23rd May 2008

 

போட்டி: 20 ஓவர்கள் போட்டி (இரவுப் போட்டி), 48-வது தகுதிச்சுற்று ஆட்டம்
இடம்: பஞ்சாப் கிரிக்கெட் மைதானம், மொஹாலி.
தேதி: 23.05.2008. வெள்ளிக் கிழமை.
மோதிய அணிகள்: டெக்கான் அணி - பஞ்சாப் அணி
முடிவு: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி
ஆட்ட நாயகன்: ஷான் மார்ஷ்

 

வணக்கம்

 

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டியின் 48-வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று இரவு மொஹாலியிலுள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டெக்கான் அணியும் பஞ்சாப் அணியும் மோதின. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

 

கடந்த போட்டியில் விளையாடிய டெக்கான் அணி வீரர்களான ஷாகித் அப்ரிடி, நுவன் சொய்சா, ஹல்ஹதார் தாஸ் ஆகியோருக்கு பதிலாக ஹெர்சல் கிப்ஸ், ஸ்காட் ஸ்டைரிஸ், சஞ்சய் பாங்கர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

 

அதே போல பஞ்சாப் அணியிலும் ஜேம்ஸ் ஹோப்ஸ், இர்பான் பதான், உதய் கால் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக சங்ககாரா, ககன்தீப்சிங், ரமேஷ் பொவார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

 

பூவா தலையா வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் யுவராஜ்சிங் முதலில் எதிரணியை பேட்டிங் செய்யும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி டெக்கான் அணி முதலில் பேட்டிங்கை துவக்கியது.

 

ஆடம் கில்கிறிஸ்ட்டுடன் துவக்க ஆட்டக்காரராக ஹெர்சல் கிப்ஸ் களமிறங்கினார். இவர்கள் இருவரும் எதிர் பார்த்தபடி சரியான துவக்கத்தை அளித்தனர்.

 

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 79 ரன்களைக் குவித்தனர். ஹெர்சல் கிப்ஸ் 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 44 ரன்கள் எடுத்திருந்த போது ககன்தீப்சிங் பந்துவீச்சில் ஸ்டம்புகளை பறி கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

இவரையடுத்து ஆடம் கில்கிறிஸ்ட்டுடன் ரோஹித் சர்மா ஜோடி சேர்ந்தார். இவர் வந்த வேகத்திலேயே பஞ்சாப் அணியின் பந்து வீச்சை சிதறடித்தார்.

 

அணியின் எண்ணிக்கை 14.5 ஓவர்களில் 111 ரன்களாக இருந்த போது ஆடம் கில்கிறிஸ்ட் ஆட்டமிழந்தார். அவர் 42 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகள் உள்பட அரைசதம் அடித்திருந்தபோது ரமேஷ் பொவார் பந்துவீச்சில் ஸ்டம்புகளை பறி கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

இவரையடுத்து ரோஹித் சர்மாவுடன் வேணுகோபால் ராவ் ஜோடி சேர்ந்தார்.

 

வேணுகோபால் ராவை ஒருபுறம் நிற்க வைத்த ரோஹித் சர்மா பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். அவர் 27 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 50 ரன்கள் எடுத்திருந்த போது வி.ஆர்.வி சிங் பந்துவீச்சில் ஸ்டம்புகளை பறி கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

இவரையடுத்து வேணுகோபால் ராவுடன் சமர சில்வா ஜோடி சேர்ந்தார்.

 

முதலில் வீழ்ந்த மூன்று விக்கெட்டுகளும் ஸ்டம்புகளை பறி கொடுத்து வீழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமர சில்வாவும் தன் பங்கிற்கு அதிரடியைக் காட்டினார். அவர் 10 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள் உள்பட 23 ரன்கள் எடுத்தும், ஸ்காட் ஸ்டைரிஸ் 1 ரன்னுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

 

வேணுகோபால் ராவ் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 

15 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்திருந்த டெக்கான் அணி, கடைசி 5 ஓவர்களில் விஸ்வரூபம் எடுத்தது. 30 பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்களைக் குவித்தது.

 

ஆட்ட நேர முடிவில் டெக்கான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.

 

பஞ்சாப் அணி சார்பில் ஸ்ரீசாந்த், பியூஷ் சாவ்லா, ககன்தீப் சிங், ரமேஷ் பொவார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

 

இதையடுத்து 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய பஞ்சாப் அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷான் மார்ஷும் சங்ககாராவும் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியைக் காட்டத் துவங்கினர்.

 

இவர்களிருவரும் முதல் விக்கெட்டிற்கு 84 ரன்கள் குவித்தனர். எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த சங்ககாரா 25 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 50 ரன்கள் எடுத்திருந்த போது ரோஹித் சர்மா பந்துவீச்சில் சமரசில்வாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

 

இவரையடுத்து ஷான் மார்ஷுடன் பஞ்சாப் அணியின் கேப்டன் யுவராஜ்சிங் ஜோடி சேர்ந்தார். அவர் 17 ரன்கள் எடுத்திருந்த போது பிரக்யான் ஓஜா பந்துவீச்சில் ஆர்.பி.சிங்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

 

இவரையடுத்து ஷான் மார்ஷுடன் லூக் பொமர்ஸ் பேச் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஷான் மார்ஷ் 46 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 

லூக் பொமர்ஸ் பேச் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 

கடைசி 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பஞ்சாப் அணி இருந்தது. 19 ஓவரை வீசிய ஸ்டைரிஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 16 ரன்களை வாரி வழங்கினார்.

 

கடைசி ஓவரின் மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றி பெறச் செய்தார் பியூஸ் சாவ்லா.

 

ஜெயவர்தனே 14 ரன்களுடனும், பியூஸ் சாவ்லா 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

பஞ்சாப் அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

ஆட்ட நாயகனாக பஞ்சாப் அணியின் ஷான் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார்.

 

பஞ்சாப் அணியின் உரிமையாளரான பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா மைதானத்தில் இருந்தபடியே அவரது அணி வீரர்களை உற்சாகப் படுத்திக் கொண்டே இருந்தார்.

 

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகள் எடுத்து அரை இறுதிக்குத் தகுதி பெறும் இரண்டாவது அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. முதல் இடத்தில் ராஜஸ்தான் அணி உள்ளது. நன்றி, வணக்கம்.

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive