CricketArchive

ராஐஸ்தானிடம் போராடித் தோற்றது சென்னை
by CricketArchive


Scorecard:Chennai Super Kings v Rajasthan Royals
Player:JA Morkel
Event:Indian Premier League 2007/08

DateLine: 24th May 2008

 

போட்டி: 20 ஓவர்கள் போட்டி (பகலிரவுப் போட்டி), 49-வது தகுதிச்சுற்று ஆட்டம்
இடம்: எம்.ஏ. சிதம்பரம் மைதானம். சேப்பாக்கம், சென்னை.
தேதி: 24.05.2008. சனிக் கிழமை.
மோதிய அணிகள்: ராஜஸ்தான் - சென்னை
முடிவு: 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி
ஆட்ட நாயகன்: அல்பி மோர்கெல்

 

வணக்கம்

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டியின் 49-வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று மாலை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் அணியும், சென்னை அணியும் மோதின.

பூவா தலையா வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஷேன் வார்னே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி ஆட்டத்தை தொடங்கிய கிரேம் ஸ்மித்- ஸ்வப்னில் அஸ்நோத்கர் ஜோடி, அந்த அணிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 127 ரன்களைக் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடியைக் காட்டிய அஸ்நோத்கர் 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த கம்ரான் அக்மல் தனது பங்குக்கு சென்னை வீரர்களின் பந்துவீச்சை பதம்பார்த்தார்.

சென்னை அணியினரின் பந்துவீச்சை துவம்சம் செய்த கிரேம் ஸ்மித் 51 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் உள்பட 91 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இவரையடுத்து வந்த யூசுப் பதான் 6 ரன்களும், முகமது கைப் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

28 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 53 ரன்களைக் குவித்து, அணியின் எண்ணிக்கையை உயர்த்திய கம்ரான் அக்மல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 3 ரன்கள் எடுத்த தருவார் கோஹ்லி ஆட்டத்தின் கடைசி பந்தில் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

ராஜஸ்தான் அணி தனது ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களைக் குவித்தது.

சென்னை அணி சார்பில் அல்பி மோர்கெல் மட்டுமே 4 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சுரேஷ் ராய்னா 1 விக்கெட்டினை வீழ்த்தினார். மகாய நிதினி, முத்தையா முரளீதரன், பாலாஜி, மன்பிரீத் கோனி உள்ளிட்ட வீரர்கள் அதிகமான ரன்களை வாரி வழங்கினர்.

ஓவருக்கு 11 ரன்களைச் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களையே சேர்த்தது.

வழக்கம் போல நியூஸிலாந்து வீரர் பிளெமிங்கும், பார்திவ் படேலும் சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆனால் துரதிருஷ்டவசமாக 7 ரன்களைச் சேர்த்திருந்தபோது ரன் ஆவுட் ஆனார் பிளெமிங்.

இந்நிலையில் பார்திவ் படேலுடன் ஜோடி சேர்ந்த சுரேஷ் ராய்னா, சேப்பாக்கத்தில் குழுமியிருந்த 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு விருந்தளித்தார். நெருக்கடி கருதி அவருக்கு இணையாக பார்திவ் படேலும் ரன்களைக் குவித்தார்.

இவர்களைப் பிரிக்க வார்னே மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிய, தானே பந்துவீச முற்பட்டார் வார்னே. அதில் சில ரன்களைக் கொடுத்தாலும், அந்த ஜோடியைப் பிரித்தார்.

27 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் உள்பட 45 ரன்கள் சேர்த்திருந்த சுரேஷ் ராய்னாவை வெளியேற்றினார் வார்னே. இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 70 ரன்களைக் குவித்தது.

அதன்பிறகு தென் ஆப்பிரிக்க வீரர் அல்பி மோர்கெல் ஆட்டம், சென்னையின் ரன் சேஸுக்கு நம்பிக்கை அளித்தது. இவர், பார்திவ் படேலுடன் சேர்ந்து ஆடிய ஆட்டம் அணியை வெற்றி பெற வைத்துவிடுவார் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடம் ஏற்படுத்தினார்.

தான் களமிறங்கியது முதலே சிக்ஸரும், பவுண்டரிகளுமாக விளாசி ராஜஸ்தான் அணியை நிலைகுலையச் செய்தார் மோர்கெல். இதனிடையே 40 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் உள்பட 45 ரன்கள் சேர்த்திருந்த போது பார்திவ் படேல் ஆட்டமிழந்தார். இவரையும் வார்னே வெளியேற்றினார்.

அதன்பிறகு சென்னை அணிக்கு ரன் நெருக்கடி ஏற்பட்டது. 29 பந்துகளில் 54 ரன்களைச் சேர்க்க வேண்டியிருந்தது. மோர்கெலும் தோனியும் களத்தில் இருந்தனர். தோனி 12 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அதன்பிறகு அணியின் வெற்றி நம்பிக்கை தளர்ந்தது.

கடைசி 2 ஓவர்களில் 27 ரன்களைச் சேர்க்க வேண்டிய கட்டாயத்தைப் பெற்றது சென்னை அணி. அரங்கம் முழுவதும் அப்படி ஓரு அமைதி. எப்படியாவது வெற்றி பெற்றுவிடுவார்களா என்ற ஏக்கம் ரசிகர்கள் முகத்தில் தெரிந்தது. 19வது ஓவரில் 12 ரன்களை எடுத்தது சென்னை அணி.

கடைசி ஓவரில் 15 ரன்களைச் சேர்க்க வேண்டியிருந்த நிலையில் சோஹைல் தன்வீர் அற்புதமாக பந்துவீசி, 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சென்னை ரசிகர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கினார்.

மிகச்சிறப்பாக ஆடி வந்த அல்பி மோர்கெல் 40 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 71 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தின் கடைசி ஓவரில், தன்வீர் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இவரே கடைசியில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

ஆட்டநேர முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்ததால், 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய சோஹைல் தன்வீர் 33 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், அந்த அணியின் கேப்டன் ஷேன் வார்னே 35 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், முனாப் படேல் 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதற்கு முன்பு சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணியிடம் 14 ரன்களில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது சென்னை அணி. அப்போது, அரையிறுதிக்காக கடைசி தகுதிச்சுற்று ஆட்டம் வரை காத்திருக்க மாட்டோம். ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலேயே வெற்றி பெற்று, அரையிறுதிச் சுற்றை உறுதி செய்வோம் என ஆரூடம் கூறியிருந்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி. ஆனால் இப்போட்டியில் பெற்ற தோல்வியால் அவர் சொன்ன ஆரூடம் பொய்த்துப் போனது. அவர் இப்போட்டியில் அதிரடியாக ஆடி அணிக்கு உறுதுணையாக இருந்திருந்தால் அவர் சொன்ன ஆரூடம் பலித்திருக்கும்.

ஏற்கெனவே அரையிறுதிச் சுற்றை உறுதி செய்து கொண்டுள்ள ராஜஸ்தான் அணி மொத்தம் 20 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. இன்னும் 2 ஆட்டங்களில் அந்த அணி விளையாட உள்ளது.

அதே சமயம் சென்னை அணி இப்போட்டியில் பெற்ற தோல்வியுடன் சேர்த்து 14 புள்ளிகளுடன் இக்கட்டான நிலையைப் பெற்றுள்ளது. அடுத்து வரும் 27-ம் தேதி டெக்கான் அணியுடன் மோத உள்ள கடைசி போட்டியில் வெற்றி பெற்றால்தான் சென்னை அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத் தக்கது.

நன்றி, வணக்கம்.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive