CricketArchive

'சூப்பர் 4' -ல் இந்தியாவிற்கு முதல் வெற்றி
by CricketArchive


Scorecard:Bangladesh v India
Player:SK Raina
Event:Asia Cup 2008

DateLine: 30th June 2008

 

போட்டி: 50 ஓவர்கள் போட்டி (பகலிரவுப் போட்டி)
இடம்: நேஷனல் மைதானம். கராச்சி, பாகிஸ்தான்.
தேதி: 28.06.2008. சனிக்கிழமை.
மோதிய அணிகள்: இந்திய அணி - வங்கதேச அணி
முடிவு: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
ஆட்ட நாயகன்: சுரேஷ் ரெய்னா

 

வணக்கம்

 

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் சூப்பர் 4 சுற்றில், இன்று கராச்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி, வங்கதேசஅணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்திய அணி பிரகாசப்படுத்திக் கொண்டது.

 

இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. வீரேந்திர ஷேவாக், பிரவீண் குமார், பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இவர்களுக்கு பதிலாக ராபின் உத்தப்பா, மன்பிரீத் கோனி, பிரக்யான் ஓஜா ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர். அறிமுக வீரராக களமிறங்கிய பிரக்யான் ஓஜா, இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டியில் பங்கேற்கும் 174வது வீரரானார்.

 

பூவா தலையா வென்ற வங்கதேச அணியின் கேப்டன் முகமது அஷ்ரபுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தமிம் இக்பாலும், நசிமுதீனும் வங்கதேச அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

 

நசிமுதீன் 9 ரன்கள் எடுத்திருந்தபோது ஆர்.பி.சிங் பந்துவீச்சில் பிரக்யான் ஓஜாவிடம் பிடி கொடுத்து வெளியேறினார்., இவரையடுத்து வந்த வங்க தேச அணியின் கேப்டன் முகமது அஷ்ரபுல் 20 ரன்கள் எடுத்திருந்தபோது மன்பிரீத் கோனி பந்துவீச்சில் பிரக்யான் ஓஜாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் சிறப்பாக விளையாடிய தமிம் இக்பால், ஒரு நாள் அரங்கில் தனது 7வது அரைசதத்தைக் கடந்தார். இவர் 67 பந்துகளில் 7 பவுண்டரிகள் உள்பட 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவருக்கு ஓரளவு ஒத்துழைப்பு தந்த ரகிபுல் ஹசன் 25 ரன்கள் எடுத்திருந்தபோது பிரக்யான் ஓஜாவின் சுழற் பந்துவீச்சில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார். சர்வதேச ஒருதினப் போட்டிகளில் இவர் வீழ்த்தும் முதல் விக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. முஷ்பிகுர் ரஹிம் 22 ரன்கள் எடுத்திருந்தபோது இவரும் பிரக்யான் ஓஜாவின் சுழலில் வீழ்ந்தார்.

 

இவர்களுக்குப் பின்னர் வந்த அலோக் கபாலி இந்திய பந்து வீச்சாளர்களை எளிதாக சமாளித்தார். யூசுப் பதான் வீசிய 43வது ஓவரில் இரண்டு இமாலய சிக்சர்கள் அடித்து மிரட்டினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இவர் இந்தியாவுக்கு எதிராக சதம் கடக்கும் முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை படைத்தார். 86 பந்துகளில் 5 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் விரைவாக சதம் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவருக்கு மஹ்முதுல்லா நல்லா ஒத்துழைப்பு கொடுத்தார். அதிரடியாக ஆடிய அலோக் கபாலி 96 பந்துகளில் 5 சிக்சர்கள், 10 பவுண்டரிகளுடன் 115 ரன்கள் எடுத்திருந்தபோது மன்பிரீத் கோனி பந்துவீச்சில் பிரக்யான் ஓஜாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். மஹ்முதுல்லா 26 ரன்களுடனும், பர்கத் ரேசா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

 

வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக தனது ஒருதினப்போட்டிகளில் அதிகபட்ச எண்ணிக்கையை பதிவு செய்தது.

 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு, வீரேந்திர ஷேவாக் இல்லாததால் துவக்க வீரர்களாக கௌதம் காம்பிரும், ராபின் உத்தப்பாவும் களமிறங்கினர்.

 

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாத ராபின் உத்தப்பா 2 ரன்களில் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ரோஹித் சர்மா 22 ரன்களுக்கு நடையை கட்டினார்.

 

இவருக்கு அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா, கௌதம் காம்பிருடன் இணைந்தார். இருவரும் வங்கதேச அணியினரின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். வங்கதேச அணியின் பீல்டிங் படுமோசமாக அமைய, இருவரும் பல முறை பிடிகொடுத்தும் எதிரணியினர் பிடியை தவறவிட்டதால் ஆட்டமிழக்கும் வாய்ப்புகளில் இருந்து தப்பினர்.

 

மஹ்முதுல்லா பந்துவீச்சில் இமாலய சிக்சர் அடித்த கௌதம் காம்பிர், ஒரு நாள் அரங்கில் தனது 10வது அரைசதத்தைக் கடந்தார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கௌதம் காம்பீர் 84 பந்துகளில் 10 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்பட 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 

மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த சுரேஷ் ரெய்னா சதம் விளாசினார். இது ஒரு நாள் அரங்கில் இவரது இரண்டாவது சதமாகும். இவருக்கு யுவராஜ்சிங் அருமையாக ஒத்துழைப்பு கொடுக்க, இந்திய அணி 43.2 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்து எளிதான வெற்றியைப் பெற்றது.

 

சுரேஷ் ரெய்னா 107 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உள்பட 116 ரன்களுடனும் யுவராஜ்சிங் 35 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை சுரேஷ் ரெய்னா தட்டிச் சென்றார்.

 

இத்தொடரில் இந்திய அணி விளையாடிய 3 போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருதை சுரேஷ் ரெய்னாதான் பெற்றுள்ளார். இப்போட்டியில் இந்திய அணி சார்பாக களமிறங்கிய பிரக்யான் ஓஜா 2 விக்கெட்டுகளையும், மூன்று விக்கெட்டுகளை தன் கையால் பிடித்தும் வெளியேற்றினார்.

 

நன்றி, வணக்கம்.

 


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2025 CricketArchive