CricketArchive

சௌவுரவ் கங்குலி
by CricketArchive


Player:SC Ganguly

DateLine: 9th July 2008

 

முழுப்பெயர்:சௌவுரவ் சண்டிதாஸ் கங்குலி

 

பிறப்பு:8 ஜூலை 1972. கல்கத்தா (தற்போது கொல்கத்தா). இந்தியா.

 

மட்டை வீச்சு முறை: இடதுகை ஆட்டக்காரர்

 

பந்து வீச்சு முறை: வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளர்

 

அணியில் வீரரின் நிலை: ஆல்ரவுண்டர்

 

விளையாடிய அணிகள்: இந்தியா, ஆசிய கிரிக்கெட் லெவன், பெங்கால், கிளாமோர்கன், லாங்கஷையர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

 

அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: ஜூன் 20-24, 1996, இந்தியா - இங்கிலாந்து இடையே லார்ட்ஸில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.
ஒருதினப் போட்டி: ஜனவரி 11, 1992 அன்று இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் இடையே பிரிஸ்பேனில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஜூன் 22, 2005 அன்று கிளாமர்கன் - சாமர்செட் இடையே கார்டிப்பில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

இந்திய அணியின் மிகச் சிறந்த இடதுகை ஆட்டக்காரர். மிகச் சிறந்த துவக்க ஆட்டக்காரர். இந்திய அணியின் வெற்றிகரமான முன்னாள் கேப்டன்களில் முதன்மையானவர் சௌவுரவ் கங்குலி..

 

கொல்கத்தாவிலுள்ள புனித சேவியர் கல்லூரியில் படித்தவர். 1992-ல் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது ஒருதினப்போட்டியில் அறிமுகமானார். ஆனால் அவருக்கு ஒரு போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டது. அப்போட்டியில் அவர் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன்பிறகு அவருக்கு விளையாட வாய்ப்பளிக்கப்படவில்லை. அவர் தனது மூத்த வீரர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதால் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

 

டெஸ்ட் போட்டியில் இவர் அறிமுகமானது 1996. இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்நாட்டிற்கு எதிரான 2- வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி சதமடித்து (131ரன்கள்) காட்டினார். இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியில் இவர் மட்டுமே சதமடித்தார். மேலும் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதில் குறிப்பிடத்தக்கவேண்டிய மற்றொரு அம்சம் எதுவெனில். இதே போட்டியில்தான் ராகுல் திராவிட்டும் முதன் முதாலாக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார்.

 

அதன்பிறகு 1999-ல் இங்கிலாந்திற்கு எதிரான ஒருதினப் போட்டிகளிில் அடுத்தடுத்து இருசதங்களை விளாசினார். அதுவரை நடுவரிசையில் களமிறக்கப்பட்ட கங்குலி, இப்போட்டிகளுக்குப் பிறகு சச்சினுடன் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். இவர்களிருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக இணைந்து பல சாதனைகளைப் படைத்தனர். ஒருதினப் போட்டிகளின் சிறந்த துவக்க ஜோடி என்ற சாதனையையும் படைத்தனர்.

 

1999-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 183 ரன்கள் குவித்தார். இப்போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவே ஒருதினப் போட்டிகளில் இவரது அதிகபட்ச ரன்களாகும்.

 

2000-ல் இந்திய அணியின் தலைவராக பொறுப்பேற்றார். அக்காலகட்டத்தில் இந்திய அணியிலிருந்த சில மூத்தவீரர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கியிருந்தனர். இதனால், இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தலைகுனிவை சந்தித்தது. அந்த கசப்புணர்வை இவரது திறமையான வழிகாட்டுதலால் மாற்றிக் காட்டினார்.

 

அந்நிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடர்களை வென்றதில்லை என்ற நிலையை மாற்றிக் காட்டினார். குறிப்பாக ஆசிய கண்டத்திலல்லாத நாடுகளிலும் வெற்றிக் கொடியை நாட்டினார்.

 

2003-ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில், இவரது தலைமையிலான இந்திய அணி மீண்டும் உச்சத்திற்கு சென்றது. இறுதிப்போட்டிவரை இந்திய அணியை வழிநடத்திச் சென்றார் கங்குலி.

 

2003-04 -ல் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரை, அவர்களது சொந்த மண்ணிலேயே 1-1 என்ற கணக்கில் இவரது தலைமையிலான இந்திய அணி சமன் செய்தது. இத்தொடரின் முதல் போட்டியில் இவர் அடித்த அசத்தலான சதம் (144 ரன்கள்), இந்திய அணியை தோல்வியுறாமல் காத்தது. இதன்பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்தது. அங்கு நடைபெற்ற ஒருதினத் தொடர், டெஸ்ட் தொடரையும், இவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

 

இவர் 2005 வரை இந்திய அணியின் தலைவராக இருந்தார். அணியின் பயிற்சியாளர் கிரேக் சாப்பலுடன் கருத்து வேறுபாடு, மோசமான ஆட்டத்திறமை காரணமாக அணியிலிருந்து விலக்கப்பட்டார்.

 

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, ஓராண்டிற்குப்பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார். தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் அதிகபட்ச ரன்களை குவித்து தனது திறமையை நிரூபித்தார். இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிராக இரட்டை சதமொன்றை (239 ரன்கள்) விளாசினார். இத்தொடரில் இவர் மொத்தம் 534 ரன்கள் குவித்தார்.

 

டெஸ்ட் போட்டிகளில் 6800 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். ஒருதினப் போட்டிகளில் 22 சதங்கள், 72 அரைசதங்கள் உள்பட 11300 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதனால் பத்தாயிரத்துக்கும் அதிகமான ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் 4-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தலைமையேற்று காலிறுதிப்போட்டி வரை அணியை வழிநடத்திச் சென்றார். அதில் 13 போட்டிகளில் விளையாடி 3 அரை சதங்கள் உள்பட 349 ரன்கள் குவித்தார்.

 

இவர் திறமை வாய்ந்த இடது கை வீரர் என்பது மட்டுமல்ல, அதிரடி வீரர் லாராவைப் போல இந்திய அணியில் விளையாடக் கூடியவர். இவர் சிக்ஸர் அடிக்கும் அழகே தனி. இக்கட்டான நேரங்களில் பந்துவீசி எதிரணியை திணறடிப்பவர். சிறந்த ஆல்ரவுண்டர். கொல்கத்தாவின் இளவரசர் என்றும், அணியினரால் தாதா என்றும் அழைக்கப்படுபவர்.

 

அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விளையாடினார். 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 96 ரன்கள் மட்டுமே குவித்தார். இதனால் இவர் அணியில் மீண்டும் இடம்பெறுவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

 

இதற்கு பதிலளித்த கங்குலி உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி, மீண்டும் அணியில் இடம்பிடிப்பேன் என்றிருக்கிறார்.

 

கடைசியாக திருத்தப்பட்ட தேதி: 18.09.08


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive