CricketArchive

அனில் கும்ப்ளே
by CricketArchive


Player:A Kumble

DateLine: 18th August 2008

 

முழுப்பெயர்: அனில் ராதாகிருஷ்ண கும்ப்ளே

 

பிறப்பு: அக்டோபர், 17, 1970, பெங்களூர், கர்நாடகா, இந்தியா

 

மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்

 

பந்து வீச்சு முறை: வலதுகை சுழற்பந்து வீச்சாளர், இடப்புறம் சுழன்று திரும்பும் படியான சுழல் வீச்சு, கூக்ளி முறை வீச்சு.

 

அணியில் வீரரின் நிலை: பந்துவீச்சாளர்

 

விளையாடிய அணிகள்: இந்தியா, ஆசியா லெவன், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கர்நாடகா, லீசெஸ்டர்ஷையர், நார்த்தாம்ப்டன்ஷையர், சர்ரே.

 

அறிமுகம்:
டெஸ்ட் போட்டி: ஆகஸ்ட் 9-14, 1990, இந்தியா - இங்கிலாந்து இடையே மான்செஸ்டரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.
ஒருதினப் போட்டி: ஏப்ரல் 25, 1990 அன்று இந்தியா - இலங்கை இடையே சார்ஜாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஜூலை 24, 2006 அன்று க்ளோசெஸ்டர்ஷையர் - சர்ரே இடையே பிரிஸ்டாலில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

இந்தியா கிரிக்கெட் அணியின் தலை சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவர். தற்போதைய இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன். உலக அளவில் டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் அனில் கும்ப்ளே.

 

கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்தவர். கேரளாவில் உள்ள காசர்கோடு மாவட்டத்திலுள்ள கும்ப்ளா (Kumbla) கிராமத்தின் நினைவாக இவருக்கு கும்ப்ளே என பெயரிட்டனர். இவரது தந்தை வழி குடும்பத்தார், இந்த கிராமத்தில் வாழ்ந்தவர்கள் என்பதால் இவருக்கு இப்பெயர் வைக்கப்பட்டது. இவரது தாய் வழி குடும்பத்தார் கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

 

கும்ப்ளே அவரது வீடு இருக்கும் தெருக்களில் கிரிக்கெட் விளையாடுவது வழக்கமாக கொண்டிருந்தார். பிறகு அங்குள்ள யங்கெர்ஸ் கிரிக்கெட்டர்ஸ் என்ற கிளப்பில், அவருடைய 13 வயதில் சேர்ந்தார்.

 

பசவங்குடி எனும் பகுதியுள்ள நேஷனல் பள்ளியில், தனது பள்ளிப் படிப்பை முடித்து, இதே நிறுவனத்தின் கல்லூரியில் சேர்ந்து படித்தார். 1991-92ல் வித்யாலாயா இன்ஜினியரிங் கல்லூரியில், மெக்கானிக்கல் இன்ஜினியர் பட்டம் பெற்றார். இவர் பட்டம் பெறுவதற்கு முன் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடினார். விளையாட்டு ஒருபுறம் இருந்தாலும், தன் படிப்பை செவ்வனே முடித்து 75% மேல் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். இது அவரது மன உறுதிக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

 

பள்ளி நாட்களிலிருந்தே கிரிக்கெட் விளையாடிய இவர், தனது கல்லூரி படிப்பின்போதும் இடைவிடாமல் தொடர்ந்தார். இவரது கிரிக்கெட் வாழ்க்கையை மிதவேகப்பந்துவீச்சாளராக ஆரம்பித்தார். பின்னாளில் சுழற்பந்து வீச்சு இவரைக் கவரவும், சுழற்பந்து வீச்சாளராக மாறினார்.

 

1989 -ல் ஹைதராபாத்திற்கு எதிரான முதல்தரப் போட்டியில் கர்நாடக அணி சார்பில் களமிறங்கி, 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

இதனால் 1989/90 -ல், 19 வயதிற்குள்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். இந்த அணி 19 வயதிற்குள்பட்டோருக்கான பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இத்தொடரின் முதல் டெஸ்ட்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி 113 ரன்கள் அடித்து அணி வெற்றி பெற காரணமாக இருந்தார். இரண்டாவது டெஸ்டில் 76 ரன்கள் குவித்தார். இத்தொடரில் இவரது செயல்பாடு அற்புதமாக இருந்தது.

 

ஏப்ரல் 25, 1998 அன்று இந்தியா - இலங்கை இடையே சார்ஜாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில்தான் இவர் முதன்முதலாக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். அதன்பிறகு அணியில் தொடர்ந்து விளையாட ஆரம்பித்தார். இதே ஆண்டு ஆகஸ்டில் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார்.

 

இதன்பிறகு இவர் தொட்டதெல்லாம் விக்கெட்தான். எல்.பி.டபிள்யூ. முறையில் எதிராளியை வீழ்த்துவது இவருக்கு கைவந்த கலை. 'ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பார்கள். அதுபோல இவரது பந்து வீச்சு திிறமையை பறைசாற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றை சொல்லலாம்.

 

1999ல் பாகிஸ்தானுக்கு எதிராக புதுடெல்லி டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார். ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் மற்றும் ஒரே இந்திய வீரர் இவர்தான்.மேலும், உலக அளவில் இச்சாதனையை படைத்த இரண்டாவது வீரர் ஆனார். முதல் இடத்தில் உள்ளவர் இங்கிலாந்து அணியின் ஜிம் லேகர். 1956 ஜூலை 26-ல் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்டில் இவர் இச்சாதனையை நிகழ்த்தினார்.

 

ஒருதினப் போட்டியில் கும்ப்ளே பந்துவீச்சை சொல்லவேண்டுமெனில், 1993ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 12 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதை சொல்லலாம்.

 

இன்னும் இவரது சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். எனினும் அதில் சில மட்டும் இங்கே.

 

இந்திய பந்துவீச்சாளர்களில் டெஸ்ட் போட்டிகளிலும் சரி (608 விக்கெட்டுகள்), ஒரு தினப்போட்டிகளிலும் (337 விக்கெட்டுகள்) சரி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார். சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் அனில் கும்ப்ளே. முதல் இடத்தில் இலங்கையின் முத்தையா முரளிதரன் 735 விக்கெட்டுகளோடு முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளோடு இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

 

இவரது நேர்த்தியான சுழற்பந்துவீச்சால் இந்திய அணி நிறைய டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒருதினப்போட்டிகளிலும் இவரது சாதனைப்பட்டியல் நீள்கிறது. இந்திய பந்துவீச்சாளர்களில் ஒரு தினப்போட்டிகளில் 337 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். உலக அளவில் 7 வது இடத்தில் உள்ளார். இவ்வரிசையில் முதலிடத்தில் பாகிஸ்தானின் வாசிம் அகரம் 502 விக்கெட்டுகளோடு முதல் இடத்திலும், இலங்கையின் முத்தையா முரளிதரன் 475 விக்கெட்டுகளோடு இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

 

பந்துவீச்சில் மட்டுமல்ல பேட்டிங்கிலும் வல்லவர். 2007-ல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தபோது, அந்த அணிக்கெதிராக தனது முதல் டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். டெஸ்ட் போட்டிகளில் 5 அரைசதங்களை விளாசியுள்ளார்.

 

2007-ன் இறுதியில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான அணி பாகிஸ்தான் அணியை தனது சொந்தமண்ணில் வைத்து டெஸ்ட் தொடரை வென்று காட்டியது.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடினார்.

 

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டனாக விளையாடினார். இத்தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்தது. இதனால் இவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது.

 

வரும் அக்டோபரில் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அத்தொடரில் இவரது நிலை என்னவென்று தெரிந்து விடும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

2005 இல் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

 

வெளியான தேதி: 17.7.08

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive