CricketArchive

சமர சில்வா
by CricketArchive


Player:LPC Silva

DateLine: 25th August 2008

 

முழுப்பெயர்: லிண்டமிலகே பிரகீத் சமர சில்வா

 

பிறப்பு: 14 டிசம்பர் 1979. பாணந்துறை, இலங்கை.

 

மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்

 

அணியில் வீரரின் நிலை: ஆல்ரவுண்டர்.

 

பந்து வீச்சு முறை: வலதுகை சுழற்ப்பந்து வீச்சாளர்

 

விளையாடிய அணிகள்: இலங்கை, தெற்கு பஸ்னஹிரா அணி, சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப், டெக்கான் சார்ஜர்ஸ், பாணந்துறை ஸ்போர்ட்ஸ் கிளப், புளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் தடகள கிளப் அணி, செபஸ்டியனிட்ஸ் கிரிக்கெட் மற்றும் தடகள கிளப் அணி.

அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: டிசம்பர் 7-9, 2006 அன்று இலங்கை - நியூசிலாந்து இடையே கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி
ஒருதினப் போட்டி: ஆகஸ்டு 26, 1999 அன்று இலங்கை - ஆஸ்திரேலியா இடையே கொழும்புவில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஆகஸ்டு 17, 2004 அன்று பர்கெர் ரெக்ரியேஷன் கிளப் - சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் இடையே கொழும்புவில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

இலங்கை அணியின் நடுவரிசை ஆட்டக்காரர். வளர்ந்து வரும் ஆல்ரவுண்டர். இலங்கையிலுள்ள பாணந்துறையில் பிறந்து வளர்ந்தவர்.

 

இவர் அணிக்குள் வந்தபோது இவருக்கு வயது 19 மட்டுமே. ஆகஸ்டு 26, 1999 அன்று இலங்கை - ஆஸ்திரேலியா இடையே கொழும்புவில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் முதன்முதாலக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். ஜாம்பவான் அணிக்கெதிராக இவர் அறிமுகமான முதல் போட்டியிலேயே 55 ரன்கள் குவித்து அசத்தினார். இந்தப் போட்டியில் இலங்கை அணி தோற்றாலும், இவரது அணியில், இவர்தான் அதிகபட்ச ரன்னை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதையடுத்து இவர் ஆடிய ஆட்டங்கள் எதும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. 1999-ல் சார்ஜாவில் நடைபெற்ற ஒருதினத் தொடரிலும், 1999-ல் ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரிலும், 2000-ல் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக ஆடவில்லை. கடைசி வாய்ப்பாக 2002-ல் இங்கிலாந்திற்கெதிரான தொடரிலும் இவர் சரியாக ஆடாத காரணத்தால் அணியை விட்டே முழுமையாக நீக்கப்பட்டு, உள்ளூர் போட்டிகளில் விளையாடும்படி அனுப்பி வைக்கப்பட்டார்.

 

இதனையடுத்து பாணந்துறை அணியின் கேப்டனாக பொறுப்பேற்று தனது திறமையை வளர்த்துக் கொண்டார். இதற்கடுத்த நான்காண்டுகளில் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். குறிப்பாக செபஸ்டியனிட்ஸ் கிரிக்கெட் அணிக்கு வந்தபிறகு, 2004-05 காலகட்டத்தில் இவரது ரன் குவிக்கும் வேகம் அதிகமாக இருந்தது.

 

இந்நிலையில் இலங்கை அணியின் பயிற்சியாளரான டாம் மூடியின் கவனத்திற்கு இவரது ஆட்டத் திறமை பற்றிய தகவல் வந்தது. இவர் ஏன் இன்னும் தேசிய அணியில் இடம்பெறவில்லை என்று ஆச்சர்யப்பட்டர். உடனடியாக இலங்கை ஏ அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்த அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய போது, அத்தொடரில் தனது திறமையை நிரூபித்தார். இதன்காரணமாக சர்வதேச இலங்கை அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 27.

 

2006-ல் நியூசிலாந்து செல்லும் இலங்கை அணியில் இடம்பிடித்தார். அணிக்கு வந்து 7 வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் அரங்கில் காலடி எடுத்து வைத்தார். டிசம்பர் 7-9, 2006 அன்று இலங்கை - நியூசிலாந்து இடையே கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இப்போட்டியின் இரு இன்னிங்ஸிலும் 0 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது.

 

இதற்கு ஈடுகட்டும் விதமாக இரு அணிகளுக்குமிடையே வெலிங்டனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் அதிரடியை காட்டி, முதல் இன்னிங்ஸில் 69 ரன்களை குவித்து, சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரை சதத்தையும், இரண்டாவது இன்னிங்ஸில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் குவித்து சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார். இதில் இலங்கை அணி 217 ரன்களில் வெற்றி பெற்றது. இவர் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இதனால் 2 போட்டிகள் கொண்ட இத்தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.

 

இவரது சிறப்பான ஆட்டத்தின் காரணமாக இலங்கை அணியின் நடுவரிசை ஆட்டக்காரராக திகழ்கிறார். இவர் பேட்ஸ்மேன் மட்டுமல்ல சுழற்பந்து வீச்சாளர், சிறந்த பீல்டர் என சகல துறைகளிலும் செயல்படுபவர்.

 

இதையடுத்து 2007-ல் இந்தியாவிற்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒருதினப்போட்டியில் 107 ரன்கள் குவித்து, ஒருதின அரங்கில் தனது முதல் சதத்தையும், அதிகபட்ச ரன்னையும் பதிவு செய்தார். இப்போட்டியில் இலங்கை அணி தோற்றாலும், ஆட்டநாயகன் விருது இவருக்கே கிடைத்தது.

 

இதையடுத்து 2007-ல் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டி தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 4 அரை சதங்கள் உள்பட 350 ரன்கள் குவித்தார்.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட, 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார்.

 

அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 1 அரைசதம் உள்பட 126 ரன்கள் குவித்தார்.

 

இதையடுத்து இந்திய அணியுடன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடரில் இடம் பிடித்துள்ளார்.

 

வெளியான தேதி: 21 ஆகஸ்டு 2008.

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive