CricketArchive

மைக்கேல் கிளார்க்
by CricketArchive


Player:MJ Clarke

DateLine: 1st September 2008

 

முழுப்பெயர்: மைக்கேல் ஜான் கிளார்க்

 

பிறப்பு: 2 ஏப்ரல் 1981, லிவர்பூல், நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா.

 

மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்

 

பந்து வீச்சு முறை: இடதுகை சுழற்பந்து வீச்சாளர்

 

விளையாடிய அணிகள்: ஆஸ்திரேலியா, ஹாம்ப்ஷையர். நியூ சவுத்வேல்ஸ்.

 

அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: அக்டோபர் 6-10, 2004, இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.
ஒருதினப் போட்டி: ஜனவரி 19, 2003 அன்று ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே அடிலெய்டில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஜூலை 2, 2004 அன்று எஸ்ஸெக்ஸ் - ஹாம்ப்ஷையர் இடையே செம்ஸ்போர்டில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

ஆஸ்திரேலிய அணியின் இளம் அதிரடி வீரர். ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டன். இவரது திறமையைக் கண்ட ரிக்கி பாண்டிங் கூறியது ''வரும் காலத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகும் அனைத்து தகுதிகளும், திறமைகளும் மைக்கேல் கிளார்க்கிடம் உள்ளன'' என்று வாயாரப் புகழ்ந்தார்.

 

ஆஸ்திரேலியாவில் உள்ள லிவர்பூல் நகரத்தில் பிறந்து வளர்ந்தவர். 1999 காலகட்டத்தில் கிரிக்கெட் உலகில் காலடி எடுத்து வைத்தார். இளம் வயதில் நியூ சவுத்வேல்ஸ் அணிக்காக விளையாடினார்.

 

2001-ல் புரா கோப்பை தொடரில், நியூ சவுத்வேல்ஸ் அணிக்காக களமிறங்கி 8 போட்டிகளில் விளையாடினார். அதில் 2 சதம், 2 அரைசதம் உள்பட 621 ரன்கள் குவித்தார். இத்தொடரின் போது விக்டோரியா அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் 111 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். 2003-ல் இதே கோப்பைக்காக நடைபெற்ற தொடரில் நியூ சவுத்வேல்ஸ் அணிக்காக களமிறங்கி 10 போட்டிகளில் விளையாடினார். அதில் 4 சதம், 2 அரைசதம் உள்பட 763 ரன்கள் குவித்தார்.

 

இத்தொடரில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் போதே இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஸ்திரேலிய அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஜனவரி 19, 2003 அன்று ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே அடிலெய்டில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். இப்போட்டியில் 39 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

 

இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான ஒருதினத் தொடரில் இடம்பிடித்தார். இத்தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 2 அரைசதம் உள்பட 175 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்து விளையாட ஆரம்பித்தார்.

 

2003-ல் இந்தியாவிற்கெதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற டிவிஎஸ் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் 28 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். மேலும், அப்போட்டியில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்து அப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

 

ஒருதின ஆட்டங்களில் சிறப்பாக ஆடியதை அடுத்து செப்டம்பர் 2004-ல் இந்தியாவிற்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்தார். இரு அணிகளுக்கும் இடையே பெங்களூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 151 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இது இவருடைய முதல் டெஸ்ட் என்பது கூடுதல் சிறப்பு. மேலும் இத்தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1 சதம், 2 அரை சதம் உள்பட 400 ரன்கள் குவித்தார்.

 

இதன் பிறகு இவர் தொட்டதெல்லாம் ரன்னாக மாறின. ஒருதினத் தொடரிலும் சரி, டெஸ்ட் ஆனாலும் சரி, அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

 

2004-ல் ஜிம்பாப்வே சென்ற அணியில் இடம்பிடித்தார். இரு அணிகளுக்கும் இடையே ஹராரேயில் நடைபெற்ற 3 வது ஒருதினப்போட்டியில் 105 ரன்கள் குவித்து, ஒருதின அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இப்போட்டியில்ல ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

 

2004-05,ல் ஆஸ்திரேலியாவில் வி.பி. கோப்பைக்கான முத்தரப்பு ஒருதினத் தொடர் நடைபெற்றது. இதில் 8 போட்டிகளில் விளையாடி 1 சதம் 3 அரைசதம் உள்பட 411 ரன்கள் குவித்தார்.

 

டெஸ்ட் அரங்கில் 2006 முதல் 2008 வரை 5 சதங்களையும், 4 அரை சதங்களையும் விளாசியுள்ளார். இவர் பேட்ஸ்மேன் மட்டுமின்றி பந்து வீச்சு, பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்படுபவர். சுருங்கச் சொன்னால் சிறந்த ஆல்ரவுண்டர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் ஓய்வு பெற்றதும், இவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது. 2008-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருதினப்போட்டியில் 56 ரன்கள் எடுத்தார். மேலும், அப்போட்டியில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்து அப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இத்தொடரின் மூன்றாவது ஒருதினப்போட்டியின்போது ரிக்கி பாண்டிங் காயமடைந்தார். இதனால் 4வது, மற்றும் 5-வது ஒருதினப் போட்டிகளின்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இவர் பொறுப்பேற்று விளையாடினார். இந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

 

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால், தற்போது வங்கதேசத்திற்கு எதிரான ஒரு தினத் தொடரில் கலந்து கொள்ளும் அணியின் கேப்டானாக மைக்கேல் கிளார்க் அறிவிக்கப் பட்டுள்ளார்.

 

வெளியான தேதி: 27.8..08

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive