CricketArchive

நாதன் பிராக்கென்
by CricketArchive


Player:NW Bracken

DateLine: 1st September 2008

 

முழுப்பெயர்: நாதன் வாடே பிராக்கென்

 

பிறப்பு: 12 செப்டம்பர் 1977, பென்ரித், நியூ சவுத்வேல்ஸ், ஆஸ்திரேலியா.

 

மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்

 

பந்து வீச்சு முறை: இடதுகை மிதவேகப்பந்து வீச்சாளர்

 

அணியில் வீரரின் நிலை: பந்து வீச்சாளர்

 

விளையாடிய அணிகள்: ஆஸ்திரேலியா, க்ளோசெஸ்டர்ஷையர், வொர்ஸெஸ்டர்ஷையர், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், நியூ சவுத்வேல்ஸ்.

 

அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: டிசம்பர் 4-8, 2003, ஆஸ்திரேலியா - இந்தியா இடையே பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.
ஒருதினப் போட்டி: ஜனவரி 11, 2001 அன்று ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையே மெல்போர்னில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஜனவரி 9, 2006 அன்று ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையே மெல்போர்னில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

ஆஸ்திரேலிய அணியின் இடது கைமிதவேகப் பந்து வீச்சாளர். இவர் வீசும் பந்து நேர்த்தியான அளவில், சிறப்பான முறையில் இருபுறமும் திரும்பும். இதனால் எதிராளி இவரது பந்துவீச்சினை சமாளிக்கத் திணறுவார். மேலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு கிடைத்திருக்கும் இடது கை மிதவேகப்பந்து வீச்சாளராவார்.

 

சர்வதேச அணியில் இடம்பெறுவதற்கு முன் நியூ சவுத்வேல்ஸ் அணிக்காக விளையாடி, அந்த அணியின் வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தார்.

 

உள்ளூர் போட்டிகளில் இவர் சிறப்பாக பந்துவீசியதால் 2001-ன் துவக்கத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருதினத் தொடரில் இடம்பிடித்தார். ஜனவரி 11, 2001 அன்று ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையே மெல்போர்னில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் தனது சர்வதேச அறிமுகத்தை ஆரம்பித்தார். இப்போட்டியில் இவர் மெக்ரத்துடன் துவக்க பந்துவீச்சளராக களமிறங்கினார். 9 ஓவர்களை வீசி 30 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

 

2003-ன் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தது. இவ்விரு அணிகளுக்குமிடையே பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் தனது டெஸ்ட் அறிமுத்தை துவக்கினார். இத்தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

இதையடுத்து 2003-04ல் இந்தியாவில் டிவிஎஸ் கோப்பைக்கான முத்தரப்பு ஒருதினத் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இத்தொடரில் அபாரமாக பந்துவீசிய பிராக்கென் 6 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிதான் கோப்பையை வென்றது.

 

இதன் பிறகு 2005-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையே பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அற்புதமாக பந்து வீசி முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி டெஸ்ட் அரங்கில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்தார்.

 

2007-ல் உலகக்கோப்பை தொடரில் இவரது பந்து வீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. சூப்பர் எயிட் (Super Eight) பிரிவில் இலங்கை அணிக்கெதிரான போட்டியில் அனாசயமாக பந்துவீசி 9.4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற இவரது சிறப்பான பந்து வீச்சும் ஒரு காரணம். இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். மேலும் இத்தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணிதான் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

2008-ல் ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் வங்கி முத்தரப்பு ஒருதினத் தொடரில் இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதின. இப்போட்டித் தொடரில் இலங்கைக்கெதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசி 47 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதை பெற்றது மட்டுமின்றி ஒருதின அரங்கில் தனது சிறப்பான பந்து வீச்சையும் பதிவு செய்தார். இத்தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடர் நாயக்ன் விருதைப் பெற்றார்.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். ஆனால் காயம் காரணமாக சில போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார்.

 

இதன்பிறகு மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஒருதினத் தொடரில் இடம்பிடித்து விளையாடினார். இதில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் டெஸ்ட் போட்டிகளில் அதிகம் பங்கேற்கா விட்டாலும் ஒருதினபோட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவருக்கு போட்டியாக தற்போது இடதுகை மிதவேகப் பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சனும் வந்துவிட்டார்.

 

தற்போது வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற இருக்கும் ஒரு தினத் தொடரில் கலந்து கொள்ளும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

 

வெளியான தேதி: 01.09.08

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive